மாஞ்சேலை pt web
தமிழ்நாடு

தனித்துவிடப்படுகிறதா மாஞ்சோலை? அச்சத்தில் மக்கள்...!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை ஊத்து காக்காச்சி பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் நடத்தி வந்த பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம், தேயிலை உற்பத்தியை நிறுத்தி பணியாளர்களையும் வேலையிலிருந்து விடுவித்தது.

PT WEB

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை ஊத்து காக்காச்சி பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் நடத்தி வந்த பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம், தேயிலை உற்பத்தியை நிறுத்தி பணியாளர்களையும் வேலையிலிருந்து விடுவித்தது.

அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், “மாஞ்சோலையில் மீண்டும் அரசு சார்பில் தேயிலைத்தோட்டம் அமைத்து பணி வழங்க வேண்டும். அங்கேயே வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டும்” உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை, காக்காச்சி பகுதிகளில் இன்றளவும் வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாஞ்சோலையில் குடிநீர் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை பராமரித்து வந்த பணியாளர்களுக்கு இன்றுடன் வேலை முடிவதாகவும், இனி சம்பளம் வழங்கப்படாது எனவும் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் தெரிவித்துள்ளது என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தடைபடும் சூழல் நாளை முதல் உருவாகும் என அச்சப்படுகின்றனர் மக்கள். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மழைப்பொழிவு மாஞ்சோலையில்தான். ஆனால் காய்ச்சல் தலைவலி இருந்தால் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ள இருந்த ஒரே மருத்துவமனையும் பூட்டப்பட்டு விட்டது. மாத்திரை வாங்க மெடிக்கலும் இல்லை. அவசர தேவைக்கு என ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஆனால் டிரைவர் இல்லை.

இது குறித்து வருவாய்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் வேலையாட்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். மின்சாரத்துறை செயற்பொறியாளர் தயார் நிலையில் இருக்கிறார். மருத்துவ தேவைக்கான மருந்துகள் மணிமுத்தாறில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.