தமிழ்நாடு

'இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?' - தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளிப்பு

JustinDurai

'தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இருவரின் சிந்தனை மற்றும் செயலில் ஒற்றுமை உள்ளது என்றும் புகழ்ந்துள்ளார்.

இளையராஜாவின் இந்தக் கருத்து தற்போது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தமிழிசை சவுந்தரராஜன், ''இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ‘வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது‘ - எதிர்க்கட்சி தலைவர்கள்