தமிழ்நாடு

என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? பதிலளிக்க பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

webteam

தேசிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “புதிய இந்தியா சமாச்சார்” “விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு” போன்ற புத்தகங்களை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, “ பீகாரில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனது ஆட்சி முறையால் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும். நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன.

ஆனால், பாஜகவே ஒரு குடும்பம்தான். கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. 6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை தாங்களே அதிக விலைக்கு விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அது அவர்களின் உரிமையும் கூட. அதை தான் பாஜக செய்துள்ளது. பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது” என்றார்.

இதனைத்தொடர்ந்து அவரிடம் ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்தக் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் தொடர்ந்த அமைச்சர், “பஞ்சாபைத் தவிர வேறெங்கிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை.பஞ்சாபில் மட்டுமே தவறான புரிதல் காரணமாக போராட்டம் நடைபெறுகிறது.ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் இயல்பு.இது அதிமுக - பாஜக கூட்டணியில் மட்டுமல்ல. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டும்.”என்றார்.