தமிழ்நாடு

குடியரசு தின விழாவை புறக்கணித்தாரா திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா? - அவரது விளக்கம் இதோ!

JananiGovindhan

புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவின் போது, தி.மு.க. மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லா கொண்டாட்டங்களை புறக்கணித்துச் சென்றதாக பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய எம்.எம்.அப்துல்லா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில்  பார்வையாளர்கள் அரசு நடைமுறை விதிகளின்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர், எம்.பி, எம்.எல்.ஏ, அரசு உயர் அதிகாரிகளுக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது அரசின் விதி.

ஆனால் ஆயுதப்படை மைதானத்தில் சம்மந்தப்பட்ட துறையினர், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்க வேண்டிய இருக்கை குறித்த விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.

அவர் பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோருக்கு முறையான இருக்கை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா குடியரசு தின விழாவை புறக்கணித்து தனது காரில் ஏறி சென்றதாக கூறப்பட்டது. இந்த நிகழ்வு பரபரப்புயும் கிளப்பியிருந்தது.

இதனையடுத்து, குடியரசு தின விழாவில் இருந்து புறப்பட்டது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் புதிய தலைமுறை செய்தியாளர் கேட்டபோது, தான் குடியரசு தின விழாவை புறக்கணிக்கவில்லை என்றும், அவசர வேலை இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.