தமிழகம் எக்கேடு கெட்டால் என்ன என்ற நயவஞ்சகத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறதா? என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிவிட்டரில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ள ஸ்டாலின், தமிழக பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முயற்சிக்காததால் இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
நதி நீர் பிரச்னைகள், மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றை தீர்க்க வேகம் காட்டாத மத்திய அரசு, அதிமுகவின் ஊழல் அணிகளை இணைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறியுள்ள ஸ்டாலின், தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்க்க ஒரு சதவிகிதம் கூட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
சிபிஐ, வருமானவரித்துறையை அரசியலுக்காக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் நிலையான ஆட்சி நடைபெறுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.