பயிர் காப்பீட்டு தொகை
பயிர் காப்பீட்டு தொகை PT
தமிழ்நாடு

திருவாரூர்: 4 ஆண்டுகளுக்கும் மேலாக பயிர் காப்பீடு தொகையில் முறைகேடு: புதிய தலைமுறை களஆய்வில் அம்பலம்

webteam

திருவாரூர் மாவட்டம் அக்கரைக்கோட்டகம் கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை குறிப்பிட்ட இடங்களில் சம்பா, தாளடி பயிர் செய்துள்ளதாக காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு அதற்கான நிவாரண தொகையும் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து உழவன் செயலியில் தொகை கட்டப்பட்ட நிலத்தின் சர்வே எண்ணை ஆய்வு செய்யும் போது அங்கு விவசாய நிலங்களுக்கு பதிலாக ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவை இருப்பது அம்பலமாகியுள்ளது.

மாறி மாறி இருந்த இருவேறு சர்வே எண்கள்!

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான பயிர் காப்பீடு கட்டியவர்களின் விவரங்களை அந்த ஊரை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு 2021ஆம் ஆண்டு விவரங்களை மட்டுமே கூட்டுறவுத் துறை வழங்கிய நிலையில் அதில் மேலும் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

அதாவது கூட்டுறவுத்துறை வழங்கிய விவரத்தில் ஒரு சர்வே எண்ணும் அதே தகவலை உழவன் செயலியில் சரிபார்க்கும் போது வேறு ஒரு எண்ணும் உள்ளது. இதனால் ஒரே நபருக்கு அரசு அங்கீகாரம் பெற்ற உழவன் செயலியில் ஒரு சர்வே எண்ணும் கூட்டுறவுத்துறை கொடுத்த விவரத்தில் வேறு ஒரு எண்ணும் எப்படி இருக்கும் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

தகவல் தர மறுத்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள்!

இந்த முறைகேடுகள் குறித்து வேளாண் துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் தகவல் தர மறுத்துவிட்டார். ஆகவே வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்துறை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப பெற வேண்டும் என்னும் கோரிக்கை வலுக்கிறது.