தமிழ்நாடு

சதுரங்கவேட்டை பாணியில் நூதன திருட்டு

webteam

இரிடியத்தின் மீதான ஆசையையும், அதற்காக நடக்கும் மோசடிகளையும் விவரித்திருந்தது சதுரங்க வேட்டை திரைப்படம். ஆயினும், இரிடியத்தின் பெயரால் மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் ராம்ராஜ் பாண்டே என்பவரிடம் ஏமாந்திருக்கிறார் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி.
 
திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த இவர், தனது முன்னோர் பயன்படுத்திய செம்பு குடுவைகளில் இரிடியம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தில், ராம்ராஜ் பாண்டேவை அணுகியுள்ளார். தன்னை விஞ்ஞானி என்று கூறிய ராம்ராஜ் பாண்டேவை நம்பி கடந்த மாதம் 20ஆம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்துநிலையம் அருகே 8 லட்சம் ரூபாய் தந்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். 
இதையடுத்து ஒரகடம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, பரிசோதனை செய்வது போல நாடகம் ஆடியுள்ளார் ராம்ராஜ் பாண்டே. பின்னர் செம்பு பாத்திரங்களில் இரிடியம் இல்லை என்று கூறியதையடுத்து, கொடுத்த 8 லட்சம் ரூபாயை பாலசுப்பிரமணியம் கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ராஜ் பாண்டே, இதேபோல பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. போலி செம்பு கலசத்தை கொடுத்துவிட்டு வருமான வரித்துறை, சிபிஐ எனக்கூறிக் கொண்டு போய் அந்த வீடுகளில் இருந்து கலசத்தை திரும்ப கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. 
இதையடுத்து ராம்ராஜ் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கதிர்வீச்சு தாக்காத கவச உடைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றையும் ‌பறிமுதல் செய்துள்ளனர்.