தன்னை பற்றியும், தனது ஐபிஎஸ் பணி அனுபவங்கள் குறித்த அனைத்தையும் புத்தகத்தில் வெளியிடுவதாக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்மீதும், அவரது ஐபிஎஸ் பணிக்கு மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் பணியில் நியமனம் செய்யப்பட்ட முறை குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அண்ணாமலை “என்னுடைய யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு மற்றும் பணி நியமனம் என அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நடைபெற்றது. தேர்வில் மட்டுமல்ல பயிற்சியிலும் நான் டாப்பராகவே இருந்தேன். என்னுடைய பணிக்காலத்தில் 4 நாட்கள் மட்டுமே நான் பாஜக ஆட்சியின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சியின் கீழ்தான் கர்நாடகாவில் பணியாற்றினேன்.
ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சிக்காக எந்தவொரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்த அகாடமிக்கு நான் சென்றதேயில்லை. என் சொந்த முயற்சியிலே தேர்வுக்கு பயின்றேன்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பதிவு குறித்தும் பல விமர்சனங்களும், கருத்துகளும் பகிரப்பட்டன.
இந்நிலையில் தனது பதிவைக் மீண்டும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, “எனது கடந்தகால சாதனைகளைப் பற்றி நான் பேசவில்லை எனினும், அதுகுறித்து வரும் தகவல்களைப் பற்றி சொல்ல விரைவில் புத்தகமாக வெளியிட உள்ளேன், அனைத்தும் அதில் விவரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.