ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படும் நிலையில், இதற்கு முன் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் பலர் அந்த சிறையில் இருந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கடந்த 2011ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திகார் சிறையில் 16 மாதங்கள் அடைக்கப்பட்டார். பின்னர் ஆ.ராசா ஜாமீனில் வெளிவந்தார். இதே 2ஜி வழக்கில், திமுகவின் கனிமொழி, 2011ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு திகாரில் உள்ள பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன், திகார் சிறையில் 35 நாட்கள் இருந்தார். அவர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சிறையில் இருந்தார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.