கடந்த 4 நாட்களில் டிடிவி.தினகரனிடம் சுமார் 37 மணி நேரம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
முதல் நாளான கடந்த சனிக்கிழமை டெல்லி போலீசில் ஆஜரான டிடிவி.தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகார் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் கோரினர். எழுத்துப்பூர்வ விளக்கத்தின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. பின்னர், தினகரன் விளக்கம் குறித்து உதவியாளரிடம் திடீர் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாம் நாளில் 11 மணிநேரம் விசாரணை நடந்தது. அப்போது தினகரனை தனிஅறையில் 3 மணிநேரம் அமர வைத்திருந்தனர்.
பின்னர், சுகேஷ் மற்றும் தினகரனை ஒன்றாக அமர வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. சுகேஷ் வாக்குமூலத்தின் உண்மைதன்மை குறித்து கேள்விஎழுப்பப்பட்டது. 3ம் நாளில் 9 மணிநேரம் விசாரணை நடந்தது. பெரும்பான்மையான கேள்விகளுக்கு ஆம், இல்லை என்றே பதில் வந்ததாக தெரிகிறது. மீண்டும் தனியறையில் தினகரன் நீண்டநேரம் அமர்த்தப்பட்டிருந்தார். பின்னர் சுகேஷ் சந்திரசேகரைத் தெரியும் என ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு டெல்லி காவல்துறை முன் டிடிவி.தினகரன் ஆஜரானார். டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரிடம் டெல்லி காவல்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் நீண்ட விசாரணை முடிவில் டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.