investigation
investigation pt desk
தமிழ்நாடு

தஞ்சை- இருவர் உயிரிழந்த விவகாரம்: மதுபானத்தில் எப்படி சயனைட் வந்தது? விசாரிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

webteam

தஞ்சை கீழ வாசல் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கிவருகிறது. கடந்த ஞாயிறன்று இந்த மதுபானக் கடை திறப்பதற்கு முன், அங்கு வந்துநின்ற மதுகுடிப்போருக்காக அருகேயே சட்ட விரோதமாக சிலர் மதுபானம் விற்பனை செய்துவந்துள்ளனர். அங்கு மதுபானத்தை வாங்கி அருந்திய குப்புசாமி, விவேக் ஆகிய இருவரும் அன்று மாலையே உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் உடல் உறுப்புக்களில் சயனைட் இருப்பது தெரியவந்துள்ளது. இகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்களின்படி, ‘மது அருந்தி உயிரிழந்த இருவரது உடல் உள் உறுப்புகளிலும் சயனைட் இருப்பது’ தெரியவந்தது.

police investigation

ஆகவே ‘இவர்கள் மதுபானம் அருந்தி உயிரிழக்கவில்லை. சயனைட் கலந்ததாலேயே உயிரிழந்துள்ளனர்’ என ஆட்சியர் தெரிவித்தார். சயனைடில் பலவகை உண்டு. உதாரணத்துக்கு தங்கத்தை உருக்குவதற்காக கூட சயனைட் பயன்படுத்தப்படுகிறது. அப்படி நகை கடையில் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து சயனைட் பெறப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வகையில் பெறப்பட்டதா, எப்படி அது மதுபானத்தில் வந்தது, இது கொலையா, அல்லது தற்கொலையா என்பது குறித்தெல்லாம் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை செய்ய தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக பார் உரிமையாளர் பழனி மற்றும் விற்பனையாளர் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். தற்போது வரை பார் பணியாளர்கள், நண்பர்கள் என 9 நபர்களிடம் தொடர் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

investigation

இதில், உயிரிழந்த விவேக்கின் நெருங்கிய நண்பரான தமிழரசன் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக விவேக் யாருடன் எல்லாம் தொடர்பு இருந்தார், சமீபகாலமாக அவருடைய செயல்பாடு எப்படி இருந்தது, அவருடைய மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து அவருடைய நண்பர் தமிழரசன், பிற நண்பர்கள் மற்றும் அவருடன் பழகியவர்கள், வேலை பார்ப்பவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.