சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் பணி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பைக்ரேஸ், வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி சுமார் 3 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் இத்தகைய குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் பணி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முதல் ஷிப்ட் பணியிலும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் பணியிலும் காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை இந்த இரண்டு ஷிப்ட் முறை அமலில் இருக்கும் என்றும், மேலும் வழக்கமான இரவு ரோந்துப் பணியிலும் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.