வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் pt web
தமிழ்நாடு

EXCLUSIVE: “நான் சபரிமலை போனதுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம்னு சொல்றாங்க! ஆனா...” - வானதி சீனிவாசன்

Angeshwar G

கேரள மாநிலம் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வதில் பிரச்னைகளும் முரண்பாடுகளும் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சமீபத்தில் அங்கு சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். தன் சபரிமலை பயணம் குறித்து புதிய தலைமுறையுடன் பிரத்யேகமாக அவர் பகிர்ந்து கொண்டவற்றை இங்கு பார்க்கலாம்.

சபரிமலையில் வானதி சீனிவாசன்

தனது பயணம் குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், “சபரிமலைக்கு செல்ல நெடு நாட்களாக எதிர்பார்த்திருந்தோம். இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களுக்கும் அவர்கள் தொடர்பான ஆன்மீக பயணம், ஆன்மீக யாத்திரை என்பது முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பம்.

என் தந்தை 1961 ஆம் ஆண்டு வட கோயம்புத்தூர் ஐயப்பன் கோயிலின் உருவாக்கத்தில் இருந்தவர். இன்று அவர் தான் தலைவராக உள்ளார். சபரிமலை போவதென்பது எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வு. என்னை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் வரை நான் காத்திருந்து எந்த விதிகளின் படி நாம் போக முடியுமோ அந்த விதிகள் வந்ததன் பின்தான் சென்று வந்துள்ளேன். சபரிமலை அனுபவமே புத்துணர்வான அனுபவமாக எனக்கு அமைந்தது.

வானதி சீனிவாசன்

எல்லா கோயில்களிலும் ஆகம விதிகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என சில இருக்கும். எந்த இடத்திலும் எந்த வழிபாட்டிலும் பெண்கள் எக்காலத்திலும் பங்கேற்க கூடாதென இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. பெண்கள் சபரிமலைக்கே செல்லக்கூடாதென்றும் சொல்லப்படவில்லை. சபரிமலையில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் என்ற பிரசாரமே தவறு.

நான் சபரிமலை சென்றதற்கு கூட, கம்யூனிஸ்ட் அரசாங்கமே காரணமென சிலர் பதிவிட்டனர். ஆனால் நானொன்றும் புதிதாக சபரிமலைக்கு போகவில்லை. இதுவரை பெண்கள் எப்படி சென்றார்களோ அப்படித்தான் நானும் சென்றேன்.

வானதி சீனிவாசன்

பழக்க வழக்கங்களை நாம் மதிக்க வேண்டும். சீர்திருத்தத்தையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் நாம் பேலன்ஸ் செய்யவேண்டும். எதை மாற்ற வேண்டும், மாற்றக்கூடாதென நாம்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார்.

இவரது பேட்டியை, செய்தியில் இணைக்கப்படும் காணொளியில் வீடியோ வடிவிலும் பார்க்கலாம்.