தமிழ்நாடு

"அதிமுக தான் பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதி வருகிறது" - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

webteam

“பெரியாரின் புகழில் ஒரு துளிகூட எனக்கு இல்லை. மனதில் உள்ளதை மக்களிடையே பேசி வருகிறேன், தேர்தல் களத்தில் எனக்கு போட்டி யாரும் கிடையாது” என தெரிவித்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்காக வாக்குசேகரிக்கும் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டிக்கான பிரச்சாரம் குறித்தும், களநிலவரம் குறித்தும் ஈவிகேஎஸ் இளங்கோவன், புதிய தலைமுறையுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. அந்த அடிப்படையில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். யாருக்கு யார் அடிமை சாசனம் எழுதி வருகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுக தான் பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதி வருகிறது.

மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி பல நன்மைகளை செய்தவர் திருமகன் ஈவேரா என்பதை மக்களை சந்திக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடர நிச்சயம் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பல நல்ல திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திட்டங்களும் இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு தகுதி இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் நடந்துள்ளன. பெரியாரின் புகழில் ஒரு துளி கூட நான் சம்பாதிக்கவில்லை என்பது உண்மை. மக்கள் மத்தியில் உருக்கமாக பேசவில்லை. மனதில் உள்ளதை மட்டும் தான் பேசி வருகிறேன்” என்று கூறினார். மேலும் “தேர்தல் களத்தில் எனக்கு யாரும் போட்டி இல்லை. வேட்பாளர்கள் பலர் இருந்த போதிலும், நண்பர் தென்னரசு இரண்டாம் இடத்தில் வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.