நீதிபதிக்கு தனியார் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பியது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தனியார் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பியது தொடர்பான வழக்கு விசாரணை, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான புகார்களை விவாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள தனிக்குழுவினர், இதுகுறித்து விசாரணை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் வீட்டிற்கு 5 தனியார் நிறுனங்களில் இருந்து பணிக்கான நேர்முகத் தேர்வு கடிதம் வந்துள்ளது. அதில் பதிவு கட்டணமாக 250 முதல் 750 ரூபாய் வரை செலுத்தும்படி கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 5 நிறுவனங்கள் இதுவரை நடத்திய நேர்முகத் தேர்வு மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. நீதிபதிக்கு நேர்முகத் தேர்வுக் கடிதம் அனுப்பியது குறித்து, சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.