தமிழ்நாடு

கடலூர்: தற்காலிக மருத்துவ பணிகளுக்கு அலைமோதிய கூட்டம் - நேர்காணலை ரத்து செய்த ஆட்சியர்

PT WEB

மருத்துவப் பணிகளுக்கான நேர்க்காணலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் கூட்டத்தை தவிர்க்க நேர்காணலை திடீரென ரத்து செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பார்மசிஸ்ட், ரேடியோகிராபர், லேப் டெக்னீசியன் ஆகிய தற்காலிக மருத்துவப் பணிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், திடீரென எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், ''நேர்காணலுக்கு வந்தவர் அனைவரும் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் வேறு ஒரு நாளுக்கு உங்களை நேர்காணலுக்கு அழைக்கிறோம்'' என்று கூறி அனுப்பி வைத்தார். இதனால் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பல ஆண்டுகளாக படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் தங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.