தமிழ்நாடு

சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு தடை

சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு தடை

webteam

தமிழகத்தில் மார்ச் முதல் அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சொத்து வாங்குவோர், விற்பனை செய்வோர் மற்றும் சொத்திற்கு பாத்தியப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி இடைத்தரகர்கள் உள்ளே சென்றது கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை‌ மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை எச்சரித்துள்ளது.

பதிவுத்துறையில் தரகர்களையும், ஊழல் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இடைத்தரகர்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.