திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 ஆம் தேதி வரை கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அரசின் தலைமைச் செயலர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசிய திமுக எம்பிக்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பட்டியலின மக்களைத் தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக எம்பி டிஆர் பாலு மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, பட்டியலின மக்களை இழிவுபடுத்தி விட்டதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது கோவையில் சேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில், வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு,தயாநிதி மாறன் ஆகியோர் தங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரினர்.
அதன்படி, இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான டிஆர் பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் மே 29 ஆம் தேதி வரை போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையையும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.