அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவருக்கு பரிசு (கார்) வழங்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பங்கேற்று பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்களுடன் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு, ஜனவரி 14 அவனியாபுரம் 15ஆம் தேதி பாலமேடு, ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பொதுவாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பலராலும் ஆர்வத்துடன் நோக்கப்படும் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் அதிக எண்ணிக்கையில் காளை அடக்கும் வீரர் அடுத்த சுற்றுக்கு தகுதி உடையவராக அறிவிக்கப்படுவார். இறுதியாக அதிக மாடுகளை பிடித்த வீரர்களுக்கு முறையே, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு அலங்காநல்லூரில் முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக இரண்டு பசு மாடுகளும், மூன்றாம் பரிசாக ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. அனைத்துப் பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் 244 எனும் என்னுடன் நான்காவது சுற்றில் களம் இறங்கினேன். 11 மாடுகளை பிடித்து பல பரிசுகளை பெற்று இருந்தேன். அதிக மாடுகளை பிடித்திருந்த நிலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கையில், கண்ணன் என்பவர் முதல் பரிசு பெற்றதாகவும், நான் இரண்டாவது பரிசு பெற்றதாகவும், சக்தி என்பவர் மூன்றாம் பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
33ஆம் எண் கொண்ட பனியனை அணிந்திருந்த கண்ணன் என்பவர் அடையாள சரிபார்ப்பு, கொரோனா சோதனை, உடற்தகுதி உட்பட எந்த சோதனைக்கு செல்லவில்லை. அவரது பெயரும் பதிவு செய்யப்படவில்லை எண் 33 என்பது முறையாக ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமானது. அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் விளையாடி காயங்களுடன் வெளியேறினார். இந்த சூழலில் கண்ணன், அவருடைய பனியனை வாங்கி அணிந்து கொண்டு ஜல்லிக்கட்டில் விளையாடி முறைகேடு செய்துள்ளார். எவ்விதமான சோதனைகளையும் மேற்கொள்ளாமல் உள்ளூர் அரசியல் தலையீட்டால் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
முறைகேடு செய்து விளையாடி அவருக்கு முதல் பரிசு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. இது அதிகாரிகளின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்த நிலையிலும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனவரி 30 ஆம் தேதி கண்ணனுக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட உள்ளது. ஆகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் பரிசை கண்ணன் என்பவருக்கு வழங்க தடை விதிப்பதோடு, முறையாக விசாரணை மேற்கொண்டு, உரிய தகுதி உடையவருக்கு முதல் பரிசை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் ," மண்டல வருவாய் அலுவலர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். பரிசு வழங்குவது குறித்து, விழாக் கமிட்டியே முடிவு செய்யும்" என தெரிவித்தார். நீதிபதி, பரிசுகள் வழங்கப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு விழாவாக நடத்தப்பட்டது. நாளை முதல்வர் முன்னிலையிலேயே, முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றதாக கூறப்பட்ட கண்ணனுக்கு, முதல் பரிசு வழங்க இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மண்டல வருவாய் அலுவலர், வாடிப்பட்டி தாசில்தார், மற்றும் மாடுபிடி வீரர்கள் கண்ணன், ஹரிக்கிருஷ்ணன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.