தமிழகத்தின் பொதுமுடக்க விதிகளை மீறும் செயல்கள் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். ஊரடங்கையொட்டி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
சென்னை அண்ணாசாலையில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். ஆயினும், ஐஸ்அவுஸிலிருந்து ராயப்பேட்டை செல்லும் சாலையில் ரம்ஜான் பண்டிகையொட்டி காய்கறி கடை, இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.
ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர், குரோம்பேட்டை, நங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. காவல்துறையினரின் கண்காணிப்பால் சாலையில் வாகன ஓட்டிகளின் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.
அம்பத்தூர் அருகே பாடியில் அவசியமின்றி சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்தனர். அவசியமின்றி சுற்றித்திரிந்ததாக நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதியம் 12 மணிக்கு பிறகும் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. நகைக்கடைகளை திறக்க அனுமதி இல்லாத நிலையிலும் அட்சய திரிதி காரணமாக சில கடைகளில் விற்பனை நடந்ததை காண முடிந்தது. இதனையடுத்து அந்த நகைக்கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் ட்ரோன் கேமரா மூலமாக நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சுற்றுவதை காவல்துறையினர் கண்காணித்தனர். விதிமுறைகளை மீறியோர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, ஓசூர் பூச்சந்தையில் அதிகளவு மக்கள் தனி மனித இடைவெளியின்றி திரண்டதால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவானது. பூ வியாபாரம் பாதிக்கப்படாமல் இருக்க மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்நேரத்தை கடந்தும் சந்தை மூடப்படாததால் மக்கள் தனி மனித இடைவெளியின்றி திரண்டனர்.
சேலத்தில் ஊடரங்கை மீறி அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என உறுதிமொழி ஏற்க வைத்து திருப்பி அனுப்பினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரடங்கு விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த நகைக்கடை, நகை அடகு கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஜவுளிக்கடையின் முன்புறம் பூட்டிவிட்டு, பின்வாசல் வழியாக விற்பனை நடைபெற்றது. கடையில் இருந்த ஊழியர்கள் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் விறுவிறுப்பாக விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அக்கடைக்கு அதிரடியாக பூட்டுப்போட்ட அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.