தமிழ்நாடு

ஈரோடு: மர்மமாக உயிரிழக்கும் ஆடு, மாடுகள்.. சிசிடிவியில் தெரிந்த சிறுத்தை நடமாட்டம்

kaleelrahman

நம்பியூரில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக கருக்குப்பாளையம் புதூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக 3 வெள்ளாடுகள், 2 செம்மறி ஆடுகள் மர்ம முறையில் இறந்து கிடந்தன. இதயைடுத்து கால்நடைகளை கொல்லும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் நம்பியூர் காந்திநகர் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்தனர். அப்போது அதில், சிறுத்தை சாலையை கடந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து கால்தடத்தை ஆய்வ செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால்தடம் என்பது உறுதியானது.

இந்த நிலையில், நேற்று மாலை இருகாலூர் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இருகாலூர், சுண்ணாம்புகரை, சுண்ணாம்பு காரிபாளையம் கருக்கம்பாளையம் ஆகிய இடங்களில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை கருக்கம்புதூர் கிராம சாலையில் சிறுத்தை தென்பட்டதாக வந்த தகவலையடுத்து கருக்கம்புதூர் கிராமத்தில் 8 கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கருக்குப்பாளையம் புதூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு ஊராட்சி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.