தமிழ்நாடு

ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

கலிலுல்லா

ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சரிந்து கிடக்கும் பாறைகளை அகற்றி, மலை ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இந்த மலை ரயில், மழை காலங்களில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.

நேற்று அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே, மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் விழுந்ததில், இருப்பு பாதை கடுமையாக சேதமடைந்தது. பெரிய அளவிலான பாறைகள் கிடப்பதால், அவற்றை வெடிவைத்து தகர்த்து அப்புறப்படுத்தும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதத்தில் மட்டும் மழையால் ஏற்பட்ட மண் சரிவுகளால் மலைரயில் போக்குவரத்து மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.