தமிழ்நாடு

ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது... வெங்கய்ய நாயுடு

Rasus

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு சபாநாயகரின் மைக்கும் உடைக்கப்பட்டது.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் தங்களை குண்டுகட்டாகத் தூக்கி அடித்து உதைத்து சட்டைகளை கிழித்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.