தமிழ்நாடு

புக் செய்த அரைமணி நேரத்தில் வீடு தேடி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்

kaleelrahman

சமையல் எரிவாயு சிலிண்டர்களை அரை மணி நேரத்தில் விநியோகம் செய்யும் 'தட்கல்' திட்டத்தை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே பெற்ற வாடிக்கையாளர்கள், எரிவாயு தீர்ந்ததும் புதிய சிலிண்டரை பெறும் வரை சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த உடனேயே சிலிண்டரை விநியோகம் செய்யும் தட்கல் முறையை அமல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே அவர்களின் வீட்டுக்கு சிலிண்டர் விநியோகிக்கப்படும்.

குறிப்பாக, தட்கல் எல்பிஜி சேவா மூலம் முன்பதிவு செய்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். தட்கல் முறையில் முன்பதிவு செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் இந்த நடைமுறையை பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.