நெல்லையில் வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், மாறன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் செம்மணி. இவரை கடந்த 3ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இதனிடையே, செம்மணியை தாக்கிய காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சக வழக்கறிஞர்கள் நேற்று நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்ட விவகாரத்தில் பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் பழனி, செல்லத்துரை, முகமது சமீர், நாகராஜன், சந்தனப்பாண்டியன் ஆகிய உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.