பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தின்போது கிணற்றில் தவறி விழுந்த நபரை, காவல் ஆய்வாளர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டிருந்தனர். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தொலைபேசியில் பேசியபடியே நடந்து சென்றிருக்கிறார்.
அப்பகுதியில் கிணறு ஒன்று திறந்து இருப்பதை கவனிக்காத அவர், எதிர்பாராதவிதமாக அதில் தவறி விழுந்தார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், இக்காட்சியைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்துவிட்டார். தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை மீட்ட அவர், சக காவலர்களின் உதவியுடன் அவரை மேலே கொண்டு வந்தார்.
மயங்கிய நிலையில் இருந்த ஜெயக்குமார் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சற்றும் தாமதியாமல் துணிச்சலுடன் செயல்பட்டு போராட்டக்காரரின் உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ஜவஹருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.