விடுப்புத்தர மறுப்பதாக வாக்கி டாக்கியில் புகார் கூறிய காவலரை தாக்கிய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையைத்தில் பணி புரியும் காவலர் தருமன். இவர் தனது தாயின் ஈமச்சடங்கில் பங்கேற்க கடந்த 21-ஆம் தேதி விடுப்பு கேட்டபோது ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுத்துள்ளார். இதனையடுத்து வாக்கி டாக்கி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தருமன் புகார் கூறினார். அதனைத்தொடர்ந்து அனுமதியின்றி அவர் விடுப்பு எடுத்ததாகத் தெரிகிறது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கி டாக்கி மூலம் தருமன் புகார் கொடுத்ததால் கோபம் கொண்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர் தருமன் வீட்டிற்கு போகும் வழி பார்த்து காத்திருந்ததாக தெரிகிறது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற தருமனின் கையைப் பிடித்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதில் தருமன் பலத்த காயம் அடைந்தார்.
இதுதவிர தருமன் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் ஆய்வாளர் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார். அத்துடன் தருமன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கும் ரவிச்சந்திரன் காரணமாக இருந்துள்ளதாக தெரிகிறது. தற்போது தருமனை, ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகளை வைத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வதெல்லாம் ஒரு தண்டனையே இல்லை என்றும், பிரச்னையை மூடிமறைக்கவே அதிகாரிகள் இப்படி செய்வதாகவும், பணி நீக்கம் செய்வதே சரியான தண்டனையாக இருக்குமென்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்