ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்க தீரத்தோடு போராடி வீர மரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரும் படுகாயம் அடைந்தார். ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வீர மரணம் அடைந்த பெரிய பாண்டியனின் உடல் தனி விமானம் மூலம் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெரிய பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது முதலமைச்சர் பழனிசாமி, கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தார். இதுதவிர டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பெரிய பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காவல்துறை சார்பில் வீரர்கள் மரியாதையையும் செலுத்தினர்.
அஞ்சலிக்கு பின் மீண்டும் விமானம் மூலம், பெரிய பாண்டியனின் உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து வாகனம் மூலம், அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புதூர் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே பெரிய பாண்டியனின் உறவினர்கள் அங்கு சென்றுவிட்டனர். மாலையில் பெரிய பாண்டியனின் உடல் அவருடைய நிலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.