ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, சாலைப்புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு நெல்லை மாவட்டம் சாலைப்புதூர் கிராமம் தான் சொந்த ஊர். இந்நிலையில் அக்கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சென்னையில் இருந்து அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். பெரிய பாண்டியனின் உடலை எதிர்பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் காத்திருக்கின்றனர். பெரிய பாண்டியனின் உடலை தமிழகத்துக்கு தனி விமானத்தில் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் சொந்த ஊர் வந்ததும், நாளை இறுதிச் சடங்குகள் செய்யவும் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
"பெரிய பாண்டியன் பிறருக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர். தனது 10 சென்ட் நிலத்தை பள்ளி தொடங்குவதற்கு தானமாக வழங்கியவர். அவர் வழங்கிய நிலத்தில்தான் ஊராட்சிப் பள்ளி இயங்குகிறது. பெரிய பாண்டியன் இறந்துவிட்டார் என்ற செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை" என சாலைப்புதூர் கிராமத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.