தமிழ்நாடு

இந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை ?

Rasus

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

விரைவான பயணத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையே 10.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. சுரங்கப்பாதை தரையில் இருந்து சுமார் 90 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 25 அல்லது 26ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.