இரவில் சரியாக தூக்கம் வராமல் இருப்பது முதியோர் மற்றும் நடுத்தர வயதினர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் வயதுக்கேற்ற துடிப்புடன் எதையாவது செய்துகொண்டே இருப்பதால் அவர்கள் படுத்தவுடன் கண்ணயர்ந்துவிடுவார்கள் என்றும் நம்புகிறோம். ஆனால், அது உண்மை அல்ல என்று நிறுவுகின்றன அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள்.
Delayed Sleep Phase syndrome என்னும் தாமத தூக்க நோய்க்குறி, உடலின் உயிரியல் கடிகாரத்தில் சிக்கல்கள் ஏற்படுவது, உறக்க-விழிப்பு சுழற்சி பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளை, இளைஞர்களும் பதின்பருவத்தினரும் எதிர்கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சமகால குழந்தைகள் மருத்துவத்துக்கான சர்வதேச இதழில் வெளியான ஆய்வு இந்தியாவில் 5.7 விழுக்காடு பதின்ம வயதினர் தாமத தூக்க நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இது 2021ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் பாதிப்பு விகிதம் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இரவு நேரங்களில் டிஜிட்டல் கருவிகள் பயன்பாடு, இரவு 9 அல்லது 10 மணிக்குப் பிறகு இரவு உணவு சாப்பிடுவது, இரவு உணவு நேரத்தில் ஒழுங்கின்மை, இவையெல்லாம் அனைத்து வயதினருக்கும் இரவு தூக்கத்தை பாதிக்கின்றன. பதின்பருவத்தினரைப் பொறுத்தவரை கல்வி சார்ந்த பணிகளாலும் இரவுத் தூக்கம் தாமதமாகிறது. Assignment, தேர்வுகளுக்குப் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு இரவுத் தூக்கம் தாமதமாகிறது.
எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் காலை விரைவாக எழுந்து பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களால் கல்வி நிலையங்களில் பாடங்களில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் அதிக பணிச்சுமை, நீண்ட நேர ஷிஃப்ட்கள், பணிசார்ந்த மன அழுத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். போதிய உறக்கம் இல்லாததால் உயர் ரத்த அழுத்தம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளையும் உளவியல் பிரச்சினைகளும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
போதிய உறக்கமின்றி இருப்பது ரத்தத்தில் மது அருந்துவதற்குச் சமமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சித் தகவலையும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நான்கு இரவுகள் ஐந்து மணி நேரங்கள் மட்டுமே உறங்குவதால் 0.06% மது ரத்தத்தில் சேர்வதற்கு இணையான பாதிப்புகளை உண்டாக்கும். ஒன்று அல்லது இரண்டு பாட்டில் பியர்களை அருந்தினால்தான் இவ்வளவு மது ரத்தத்தில் கலக்கும். 24 மணி நேரம் தூங்காமல் இருந்தால் 0.10% மது ரத்தத்தில் கலப்பதற்கு இணையான பாதிப்பு உண்டாகும்.
பல்வேறு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதற்கான அளவையும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆறு முதல் 13 வயதுப் பிரிவினருக்கு ஒரு நாளைக்கு ஒன்பது முதல் பதினொரு மணிநேரம் தூங்க வேண்டும். 14 முதல் 17 வயதினர் எட்டிலிருந்து பத்து மணிநேரம் தூங்க வேண்டும். 18 முதல் 64 வயதுவரை உள்ளவர்கள் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும். இதன் அடிப்படையில் நாம் நமது வயதுக்கேற்ற அளவு உறங்குகிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.