குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகளிடம் விசாரணை செய்தபோது போலீஸ் நிலையத்திலேயே காதலன் திடீரென பிளேடால் கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (20). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (25), என்பவருடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருநெல்வேலியில் இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். அதில் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருவரையும் விசாரணைக்காக போலீஸ்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது தனது காதலியை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே ரஞ்சித் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டார்.
இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் சில வருடங்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தனது காதலனுடன் செல்ல விருப்பம் என அந்த பெண் தெரிவித்ததையடுத்து இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்திலேயே திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோதே போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே காதலன் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முறை இல்லாததால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.