தமிழ்நாடு

தக்கலை: பயனற்றுக் கிடக்கும் குடிநீர் தொட்டிக்கு மலர் வளையம் - கிராம மக்கள் நூதன போராட்டம்

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பயனற்ற நிலையில் இருந்த சிறு மின்விசை குடிநீர் தொட்டிக்கு கிராம மக்கள் மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள வெட்டிக்கோணம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடிநீர் தேவைக்காக பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் 2013ஆம் ஆண்டு சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குடிநீர் தொட்டியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. ஆதனால் அந்த கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.

இதையடுத்து நேற்று கொரோனா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்த கிராம மக்கள் பக்கத்து கிராமத்திற்கு சாலை வழியாகச் சென்று குடிநீர் எடுத்து வர முடியாத சூழல் நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி பயனற்று இருக்கும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தரக்கோரி தொட்டிக்கு மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.