ஜல்லிக்கட்டுபோராட்டக்காரர்கள் 26ம் தேதி வரை காத்திருந்து குடியரசு தினத்தைச் சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக காவல்துறைக்கு தகவல்வந்ததாக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் அது தொடர்பான வன்முறை குறித்து சட்டப் பேரவையில் அவர் விளக்கமளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியவர்கள் அதற்கான தடையை விலக்கிய பின்னரும் நிரந்தர சட்டம் வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தியதைக் குறிப்பிட்டார்.காவிரி, முல்லைப் பெரியாறு,பன்னாட்டு பொருட்கள் வர்த்தகத்துக்குத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தனித்தமிழ்நாடு கோரிக்கையை அவர்கள் வைத்ததாகவும் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து சீர்குலைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்ததாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒசாமா பின்லேடன் படத்தை வைத்திருந்ததாகவும், அவர்கள் குடியரசு தினத்தை நிராகரிப்பதாக பேனர்கள் வைத்திருந்ததாகவும் கூறிய அவர், அதற்கான ஆதாரங்களை அவையில் காட்டினார்.மேலும் சற்றுமுன் ஓபிஎஸ் மரணம் என்ற பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியதோடு, அதையும் அவையில் காட்டினார்.