அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்காக ஆண்டாளை கொச்சைப்படுத்த வேண்டாம் என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழவே அவர் அதற்காக வருத்தமும் தெரிவித்துவிட்டார். இருப்பினும் ஆங்காங்கே இன்னும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேபோன்று அவர் மீது பல காவல்நிலையத்தில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆண்டாள் சர்ச்சை தொடர்பான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “ ஆங்கிலத்தில் ‘missing the wood for the trees’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, ஒரு செய்தியில், எது முக்கியமோ அதை விட்டு விட்டு, தேவையில்லாததை மிகைப் படுத்துதல் என்று பொருள். அது போல்தான், இப்பொழுது ஆண்டாளைப் பற்றி நடந்து வரும் விவாதங்கள்.
ஆண்டாளைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறிய தகவல் தவறானது என்று அவர் கூறியதை எதிர்த்து வாதாடலாமே தவிர, அவர் ஆண்டாளை எப்படி அவமானப்படுத்தினார் என்பது எனக்குப் புரியவில்லை. ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர், ஆண்டாள் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒரு தேவதாசி என்று சொன்ன கருத்தை எடுத்துக் கூறியது எப்படி ஆண்டாளை இழிவுப் படுத்திப் பேசியதாகும் என்பது எனக்கு விளங்கவே யில்லை. அக்கருத்து தவறு என்று சொல்வதற்கு இடமிருக்கிறதே தவிர, அவர் அவமானப் படுத்தினார் என்று சொல்வதற்கு இடமேயில்லை. பல்லவர், சோழர் காலத்தில் தேவதாசிகளுக்குக் கோயிலில், அர்ச்சகர்களுக்கு ஈடான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றது.
சங்க காலத்தில், பாணர், விறலியர், கூத்தர் ஆகியோருக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் தரப்பட்டிருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம். ஆனால் பிற்காலத்தில், அவர்கள் தகுதி குறைந்தது என்பது, சமூகச் சீரழிவை சுட்டுகின்றதே தவிர, இது எந்த விதத்திலும் அவர்களைப் பற்றிய விமர்சனம் அன்று.. இவ்வாறு கூறுவது சீரழிந்த நம் முகத்தை நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடி. அது போல்தான், ஆண்டாளை ஒருவர் தேவதாசி என்று கூறி அவமானப் படுத்தினார் என்று கூறும் விமர்சனம்.
ஆண்டாள் ஓர் அற்புதமான கவிஞர், சொல்லேர் உழத்தி. பன்னிரு ஆழ்வார்களிலே நம்மாழ்வருக்கு ஈடான தகுதியில் வைத்து, வைணவ சம்பிரதாயத்திலே போற்றப்பட்டு வரும் கவிஞர். அவரைத் தற்கால அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப் படுத்த வேண்டாம்.” என கூறியுள்ளார்.