- சீ. பிரேம்குமார்
உலகில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இருக்கும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக கடந்த, டிசம்பர் 10-ம் தேதி உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab) வெளியிட்ட உலக சமத்துவமின்மை அறிக்கை (2026) மூலம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை ஏற்கனவே, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், உலக சமத்துவமின்மை அறிக்கை (2026) இந்த வருடம் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில், சொத்து மற்றும் வருமானம், வாங்கும் சக்தி திறன் ஆகியவற்றில் நிலவும் சமத்துவமின்மை பற்றிய தரவுகள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின் படி, நாட்டில் உள்ள மொத்த சொத்தில், முதல் 10% பணக்காரர்கள் 65%-க்கும் அதிகமான செல்வத்தை வைத்துள்ளனர். அதிலும், 1% பணக்காரர்கள் 40.1% செல்வத்தை வைத்துள்ளனர். கீழே உள்ள 50% ஏழைகளிடம் இருப்பது வெறும் 6.4% மட்டுமே.
தேசிய வருமானத்தைப் பொறுத்த வரையில், 10% மக்கள் 58% வருமானத்தைப் பெறுகிறார்கள். அதில், 1% மக்கள் 22.6% சதவீத தேசிய வருமானத்தைப் பெற்றுள்ளனர். மேலும், மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50% மக்கள் தேசிய வருமானத்தில் 15%-ஐ மட்டுமே கொண்டுள்ளனர்.
இந்த அறிக்கை இந்தியாவில் சமத்துவமின்மை குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்த அறிக்கை இந்தியாவில் சமத்துவமின்மை குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என சுட்டிக்காட்டுகிறது. சமத்துவமின்மை அறிக்கையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான ரிக்கார்டோ கோமஸ் - கரெரா, “சமத்துவமின்மை என்பது பெரும் அவமானகரமாக மாறும் வரை அமைதியாகவே இருக்கும். இந்த அறிக்கை சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்கிறது. மேலும், இன்றைய சமத்துவமற்ற சமூக கட்டமைப்புகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விரக்தியில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு குரல் கொடுக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியரும், பொருளாதார நிபுணருமான தாமஸ் பிக்கெட்டி, ”இந்த அறிக்கை அரசியல் ரீதியாக சவாலான ஒரு நேரத்தில் வந்துள்ளது, ஆனால் இது முன் எப்போதையும் விட முக்கியமானது. 2025 ஆண்டில் சமத்துவமின்மை என்பது அவசர கவனம் தேவைப்படும் நிலையை எட்டியுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நீடித்திருக்கிறது. இந்தியாவில், ஆண்களை ஒப்பிடும்போது பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 15.7 சதவீதம் மட்டுமே, அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்கேற்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. மேலும், பெண்கள் வீட்டில் வேலை செய்யும் நேரத்தையும் சேர்த்து வாரத்திற்கு 53 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆண்களின் உழைப்பு நேரம் சராசரியாக 43 மணி நேரம். ஆனால், ஆண்கள் ஒரு மணி நேரத்திற்கு பெறும் சம்பளத்தின் மதிப்பின் அளவிற்கு, 32% வருமானத்தை மட்டுமே பெண்கள் தங்களின் உழைப்பிற்கு பெறுகிறார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வாறு, உலக சமத்துவமின்மை அறிக்கை 2025-ன் மூலம் சொத்து, வருமானம், பாலினம் போன்றவற்றில் அபரிமிதமான ஏற்றத்தாழ்வுகள் இந்தியா மற்றும் உலக அளவில் நிகழ்வதை சுட்டிக் காட்டியிருக்கிறது.