தமிழ்நாடு

குறையும் கொரோனா தொற்று பரவல் - ரயில் ஏசி வகுப்புகளில் மீண்டும் போர்வை, தலையணைகள்

சங்கீதா

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் இன்று முதல் மீண்டும் படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த கொரோனா பரவலால் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தநிலையில், பெரும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. கொரோனா தொற்று பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அந்தவகையில், ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் படுக்கை விரிப்பு , தலையணை, கம்பளி போர்வை போன்றவை பயணிகளுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து, ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 1 முதல் மதுரையிலிருந்து புறப்படும் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மற்றும் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், தலையணை, கம்பளி போர்வை ஆகியவை வழங்கப்படுகிறது.

இதேபோல் புதுடெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், சென்னை - மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஜம்மு வைஷ்ணவ தேவி கட்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், ராஜ்ய ரணி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களிலும் படுக்கை விரிப்புகள் ஏப்ரல் 1 முதல் வழங்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.