தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் - 8 மாத கர்ப்பிணி பலி

webteam

இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனத்தை (INS pallava) இயக்கி வந்த ஓட்டுநர், கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரி எதிரே உள்ள காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு (INS pallava) சொந்மான வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர், எதிரே சென்ற இருசக்கர வாகனத்தின்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து இருந்த 8 மாதம் நிறைந்த கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்தது தெரிந்தும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் விரட்டிச்சென்று சென்னைப் பல்கலைக்கழகம் எதிரே வாகனத்தோடு பிடித்தனர். வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் கோபம் அடைந்த பொதுமக்கள், (INS pallava) கடற்படை வாகனத்தை லேசாக சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் வாகனத்தை கைப்பற்றி, போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.