ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டா, கடலோர காவல்படையில் பயன்படுத்தும் ரகம்தான் என இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமராவ் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் கடந்த 13-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகார் எழுந்தது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிச்சை என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சில மீனவர்களும் காயம் அடைந்தனர். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டா வகையை கடலோர காவல்படை பயன்படுத்துவது இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமராவ், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டாவானது கடலோர காவல்படை பயன்படுத்தும் தோட்டா பாயிண்ட் 22 எம்.எம் வகையைச் சேர்ந்ததுதான் என தெரிவித்துள்ளார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டா, பாய்ண்ட் 22 வகையைச் சேர்ந்தது என முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.