தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிக் கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ஆம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.