ஆதார் அட்டை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடியுரிமை உள்ளவராகி விட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
திவ்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஜூலை ஒன்றாம் தேதி தனது தாயார் ஜெயந்தியை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்த ஜெயந்தி, போரின் காரணமாக தமிழகத்திற்கு வந்து பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு இங்கேயே வசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் பணி நிமித்தமாக அடிக்கடி இத்தாலி சென்று வந்துகொண்டிருந்த ஜெயந்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் 1994-ம் ஆண்டு காலாவதியான நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவராக ஆகி விட முடியாது என்று கூறினார். சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அங்கீகரித்தால் மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளவராக கருத முடியும் என கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.