communist party office
communist party office file image
தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யுவபுருஷ்

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லாததால், பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆளுநரின் ராஜ்பவன் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சூடு தணிவதற்குள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக X தளத்தில் பதிவிட்ட அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள். இந்த திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.

நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது. தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து , கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.