தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்துள்ளது.
கச்சதீவு அருகே நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர், இந்தியில் பேசக் கூறியதாகவும், இந்தி தெரியாத காரணத்தால் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பிச்சை மற்றும் ஜான்சன் என்ற இரண்டு மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை இந்திய கடலோரக் காவல்படை முற்றிலும் மறுத்தது.
இதையடுத்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டித்து நாளை ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் மீனவர்கள் மற்றும் கடலோரக் காவல்படையினர் இடையேயான மாதந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கடலோரக் காவல்படை வருத்தம் தெரிவித்தது. அத்துடன் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் காவல்படை உறுதியளித்துள்ளது. இருப்பினும் தங்களது ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட படி நாளை நடைபெறும் என மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.