தமிழ்நாடு

கோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்

கோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்

webteam

லண்டனில் உள்ள கோகினூர் வைரம் இந்தியாவுக்கு மீண்டும் எடுத்துவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

14ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது கோகினூர் வைரம். 105 காரட் மதிப்பு கொண்ட அந்த வைரம்தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்றதாக ஒரு தரப்பினர் கூறினாலும், இது பிரிட்டிஷ் மன்னர் பரம்பரைக்கு பரிசாக வழங்கப்பட்டது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நகை வியாபாரிகள் சங்கம் சார்பாக சென்னை வர்த்தக மையத்தில் தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களின் கண்காட்சி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வாக்கியத்தை சுட்டிக்காட்டி 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நகைகள் விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் சிலப்பதிகாரம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களில் நகை வர்த்தகம் பற்றி தெரிவிப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்ட கோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு மீண்டும் எடுத்து வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் கோகினூர் வைரம் குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த வைரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திருடிச் செல்லவில்லை; லாகூர் மகாராஜாவால் வேறு வழியின்றி கொடுக்கப்பட்டது என இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.