தமிழ்நாடு

நலிந்து வரும் ரியல் எஸ்டேட் துறை - மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகுமா?

webteam

நாட்டின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து நலிவில் இருந்து வருகிறது.

சென்‌னை உள்ளிட்ட நாட்டின் 9 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 13% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 294 வீடுகள் விற்றிருந்த நிலையில், இந்நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 220 வீடுகளே விற்றுள்ளன. நாடெங்கும் சுமார் 6 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

இதனால், கட்டட உரிமையாளர்களுக்கு பலகோடி ரூபாய் முடங்கி, அது வங்கிகளின் வாராக்கடனாக மாற வழிவகுத்துள்ளது. பிற நாடுகளில் முத்திரைத்தாள், பத்திரப் பதிவு கட்டணங்கள் 2 முதல் 3‌ சதவிகிதம் வரையிலேயே உள்ளதாகவும் நம் நாட்டில் இது 11 சதவிகிதமாக இருப்பது வீடுகள் விற்பனை மந்தமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்கின்றனர் கட்டுமானத் துறையினர்.

ரியல் எஸ்டேட் துறையை தொழில்துறையாக அங்கீகரிப்பதோடு, வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்கி உதவ வேண்டும் என்கின்றனர் இத்துறையினர். உள்நாட்டு உற்பத்தியில் 6 முதல் 8 சதவிகித பங்களிப்பை வழங்கி வரும் இந்தத் துறைக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்க வேண்டும் என கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் ஹபீப் கூறுகிறார்.

தற்போது வீடு வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை ஒன்றரை லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், அதனை ஏழரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனக் கட்டுமான நிறுவனங்கள் கோரியுள்ளன. மேலும் வீட்டுக்கடனுக்கு 9 முதல் 11 சதவிகித வங்கி வட்டி வசூலிக்கப்படும் நிலையில், இதை 7 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

கோடிக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தரும் கட்டுமானத்துறைக்கு புத்துயிர் தரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் எனக் காத்து கொண்டுள்ளனர் ரியல் எஸ்டேட் துறையினர்.