தமிழ்நாடு

ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

webteam

போர்க்குற்ற விசாரணையை மேலும் இரு வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமைகளின் பக்கம் நின்று இந்தியா வாதிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் திமுக ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் தீர்மானித்து, இருப்பினும் அந்த விசாரணை எவ்வித முன்னெடுப்பும் இன்றி இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு எந்த நீதியும், நியாயமும் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மேலும் இரு வருடங்கள் கால அவகாசம் கொடுக்கலாம் என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், இங்கிலாந்தும் கைகோர்த்துக் கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் உள்ளிட்டவை குறித்த விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து அழுத்தம் திருத்தமாக எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.