தமிழ்நாடு

வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர்

kaleelrahman

வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்து விட்டதாக புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வாக்குச்சாவடி மைய அலுவலர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 21 பேர் போட்டியிடுகின்றனர். இதில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலில் 18 ஆவது நபராக உள்ளார்.

இந்நிலையில் அகர வரிசைப்படி இரண்டாவதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது சொந்த பகுதியான காமராஜர் புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களிக்க சென்றுள்ளார்.

அங்கே இரண்டாவது வாக்குப்பதிவு இயந்திரம் முதலிலும், முதலாவது வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாவது இடத்திலும் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ரஜினிகாந்த் இதுகுறித்து வாக்குச்சாவடி மைய அதிகாரிகளோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வாக்குப்பதிவையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் தவறுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டுவிட்டது. உடனடியாக அதனை சரி செய்து விடுவதாக கூறியதை அடுத்து சுயேச்சை வேட்பாளர் ரஜினிகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.