தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சார்பாக கோட்டையில் கொடியேற்றம் மற்றும் விழா நடைபெற்றதைப் போல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களுடைய கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடின.
நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு நடத்தாவிட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்றார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் பேசிய தா.பாண்டியன், வேலையில்லா திண்டாட்டதை ஒழிக்கவும் விவசாயிகளைக் காக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், சுதந்திரபோராட்ட வீரர் சங்கரய்யா தேசியக் கொடியையும், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சிக் கொடியையும் ஏற்றினர்.