தமிழ்நாடு

ஒருங்கிணைந்த காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா: 2 வாரங்களில் 106 நபர்கள் உயிரிழப்பு

webteam

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 106 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு தற்போது 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு தற்போது 37 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோய் பரவலின் தாக்கம் காரணமாக, தொற்று பரவலை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 200 க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு
நோய் பரவல் தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 நபர்ளும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 66 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் சுவாசப் பிரச்சனை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.