தமிழகம் - ஆந்திரா எல்லையில் கனமழை பெய்து வருவதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக - ஆந்திர எல்லையான வீரண்ணமலையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. அதனால், அங்குள்ள ஏரி உடைந்ததால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் 25க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பின. அதனால், வீரண்ணமலை வழியாக பாலாறு வழியாக தமிழக எல்லையான அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, அர்ப்பாண்டகுப்பத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் அம்பலூர் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், ஆந்திரா மற்றும் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைத்துவிடும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.